தஞ்சை பெரிய கோவிலில் ரூ.22¾ லட்சம் உண்டியல் காணிக்கை
தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் மூலம் ரூ.22¾ லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் மூலம் ரூ.22¾ லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகியம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகர், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
ரூ.22¾ லட்சம் காணிக்கை
இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த முறை 2 மாதங்களுக்குப்பிறகு நேற்று பல்வேறு சன்னதிகளில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் அந்த உண்டியல்கள் உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன், செயல் அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ரூ.22லட்சத்து 75 ஆயிரத்து 703 வருமானமாக கிடைத்தது. இது தவிர வெளிநாட்டு நோட்டுகள் 23-ம் கிடைத்தன.
----