ரூ41 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம்

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ41 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-04-07 16:31 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.41.74 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரெயில்வே மேம்பாலம்

திருவண்ணாமலையில் திண்டிவனம் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டின் வழியாக காட்பாடியில் இருந்து விழுப்புரத்திற்கு ரெயில் இயக்கப்படுவதற்காக ஒவ்வொரு நாளும் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

இதனால் சாலையை பயன்படுத்துபவர்கள், அன்றாட பணியாளர்கள், தொழிற்சாலை வாகனங்கள், ஆம்புலன்சுகள், பொது போக்குவரத்து போன்றவை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின. 

அதனால் அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அங்கு ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த               2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. 

இந்த மேம்பாலமானது 666 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு                 ரூ.41 கோடியே 74 லட்சம் ஆகும். கொரோனா பரவல் காரணமாக இந்த மேம்பாலம் கட்டும் பணியில் கால தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிற்கு இணங்க மேம்பாலம் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதையடுத்து பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி நிறைவடைந்தது.

முதல்-அமைச்சர்    திறந்து வைத்தார்

இந்த மேம்பாலத்தால் திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் மற்றும் புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களுரு செல்லும் அனைத்து வாகனங்களும் பயன் அடையும். 

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருடம் முழுவதும் வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் இந்த ரெயில்வே மேம்பாலம் மிகவும் பயனுள்ளதாக அமையும். 

மேலும் அலுவலகம் செல்லும் அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ரெயில்வே மேம்பாலத்திைன பயன்படுத்தி பயன்பெறுவார்கள். 

இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.41 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை ரெயில்வே மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

அப்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.

கலெக்டர் தொடங்கி    வைத்தார்

அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில்வே மேம்பாலத்தினை மாவட்ட கலெக்டர் முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறந்து வைத்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து அரசு பஸ்கள், அரசு அலுவலர்கள் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக இயக்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மு.பிரதாப், முன்னாள் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் கே.வேணுகோபால், நெடுஞ்சாலை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத்தலைவர் ராஜாங்கம், 

திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட செயலாளர் எஸ்.பன்னீர்செல்வம், அருணை கன்ஸ்டிரக்‌ஷன்ஸ் துரை.வெங்கட், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அரி கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர்கள் பிரியா விஜயரங்கன், டி.வி.எம்.நேரு மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்