தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் - கலெக்டர்
தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
திருவாரூர்:-
தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
அறிவியல் கண்காட்சி
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அறிவியல் கண்காட்சிகள் மாணவர்கள் தங்கள் அறிவியல் அறிவினை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. இந்த கண்காட்சி அறிவியல் ஆர்வத்தினை ஊக்குவித்து, ஆராய்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.
திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்
செல்போன், கணினி, மடிக்கணினி போன்ற தொழில்நுட்ப கருவிகள் இல்லாத காலத்திலேயே பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிந்தது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வதுடன், திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கண்காட்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பார்த்தசாரதி, மணிவண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.