தூத்துக்குடியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி
தூத்துக்குடியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தன
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தன.
சதுரங்க போட்டி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தன. இதில் ராபிட் எனப்படும் விரைவுப் போட்டியும், பிளிட்ஸ் எனப்படும் அதிரடிப்போட்டியும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராபிட் போட்டியில் 261 சதுரங்க வீரர்களும், பிளிட்ஸ் எனப்படும் அதிரடிப்போட்டியில் 181 வீரர்களும் பங்கு பெற்றனர்.
இது பொதுப்பிரிவு போட்டி என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டி தொடக்க விழாவுக்கு காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சர்வதேச முதன்மை நடுவர் அனந்தராம், கல்லூரி பொருளாளர் முத்துசெல்வம் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
ராபிட் போட்டியில் சிவகங்கை மாவட்டம் சா.கண்ணன் முதல் பரிசையும், சென்னை ஹர்ஸ் சுரேஷ் 2-வது இடத்தையும், சேலம் கனிஷ்கா 3-வது இடத்தையும் பிடித்தனர். பிளிட்ஸ் போட்டியில் செங்கல்பட்டு விக்னேஷ் முதல் இடத்தையும், மதுரை செல்வமுருகன் 2-வது இடத்தையும், கன்னியாகுமரி அஷ்வத் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பரிசளிப்பு விழா
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி இணை செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக துணை செயலாளர் ஆல்டிரின் வரவேற்று பேசினார். முதன்மை நடுவர் வினோத்குமார் அறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக சர்வதேச நடுவர் அனந்தராம் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும், கல்லூரி பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.
விழாவில் கல்லூரி செயலாளர் சோமு, சுயநிதிப்பிரிவு இயக்குனர் அருணாச்சலராஜன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் நந்தகுமார் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பாலசிங், தூத்துக்குடி தாலுகா சதுரங்க கழக செயலாளர் ரைபின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி நன்றி கூறினார்.