கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நாகையில் கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-07 15:29 GMT
நாகப்பட்டினம்:
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நாகையில் கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம ஊராட்சி களப் பணியாளர்கள் சங்கம், அரசு பணியாளர் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வி, மாவட்ட செயலாளர் சங்கீதா, ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் பிரகாஷ், மாநில செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் இன்சுரன்ஸ் பிடித்தம் செய்ய வேண்டும்
ஓய்வூதியம்
ஊராட்சி தோறும் பணியாளர்களின் பட்டியல் வெளியிட வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை பணியாளர் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யவேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம், பொங்கல் போனஸ் உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியாளர் அனைவருக்கும் அடையாள அட்டை, 3 மாதத்துக்கு ஒருமுறை சீருடை, உபகரணங்கள், தளவாட பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஊராட்சி களப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்