கழிவறையில் பெண் பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் விட்டு சென்ற தாய் கைது

கழிவறையில் பெண் பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கள்ளக்காதலால் பிறந்ததாக விட்டு சென்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-07 15:26 GMT
பொன்னேரி அருகே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அத்திபேடு கிராமம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கழிவறையில் பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கைப்பற்றிய செய்தி வெளியானது. இதுகுறித்து சோழவரம் போலீசார் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வைத்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

இறந்த குழந்தையை விட்டு சென்றது கும்மிடிபூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பெண் என்பதும், அவர் ஏற்கனவே திருமணமான நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். எனவே அதே பகுதியில் உள்ள டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து கள்ளக்காதலால் அவர் கர்ப்பமுற்று தனியார் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கள்ளக்காதலால் பிறந்த குழந்தையை மறைப்பதற்காக கழிவறையில் போட்டு விட்டு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் குழந்தையின் தாயை கைது செய்தனர்.

மேலும் குழந்தை இறந்து பிறந்ததா அல்லது கழிவறையில் போட்டு விட்டு சென்றதால் இறந்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையின் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்