பாளையங்கோட்டையில் பொதுமக்கள் பஸ் மறியல்

பாளையங்கோட்டையில் பொதுமக்கள் பஸ் மறியல் செய்தனர்.;

Update:2022-04-07 20:32 IST
செம்பட்டி:
செம்பட்டி அருகே பாளையங்கோட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பாளையங்கோட்டை, கூலம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி உள்பட 7 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சொந்த வீடு இருந்து, அதற்கு வீட்டு வரி செலுத்தினால் மட்டுமே அவர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று, வார்டு உறுப்பினர் சீனியம்மாள் தலைமையில் திண்டுக்கல்லில் இருந்து, சித்தையன்கோட்டைக்கு அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைப்பிடித்து மறியல் செய்தனர். பின்னர் அவர்கள் பஸ்சை விடுவித்து விட்டு பாளையங்கோட்டை ஊராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சணாமூர்த்தி, ஏழுமலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு உடனடியாக 100 நாள் வேலை திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும், பணித்தள பொறுப்பாளர்களாக உள்ள 2 பெண்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதற்கு, கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால், இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்