பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
பழனி:
பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என ஏராளமானோர் வேலை செய்கின்றனர். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் ஆகியோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட கூடுதல் வேலை வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றியதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அதை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
தகவலறிந்து வந்த மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பழனி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.