தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த கொள்ளையன் கைது
தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
பத்மநாபபுரம்,
தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சிகிச்சைக்கு சென்ற மூதாட்டி
தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சியை சேர்ந்தவர் ஞானையன். இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 80). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்து காலில் அடிபட்டதால் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். இதனை கவனித்த நபர் ஒருவர் செல்லம்மாளின் அருகில் சென்று உதவி செய்வது போல் பேச்சு கொடுத்தார்.
அவரிடம், உங்களுக்கு அடிபட்ட காலில் ஸ்கேன் எடுக்க வேண்டும். அதற்கு, நான் உங்களை அழைத்து செல்கிறேன் என தெரிவித்தார். இதனை நம்பிய செல்லம்மாள், அந்த ஆசாமியுடன் சென்றார்.
நகை அபேஸ்
ஸ்கேன் மையத்திற்குள் செல்லும் போது, அந்த நபர் மூதாட்டியிடம், ‘ஸ்ேகன் எடுக்கும் போது நகை அணிந்திருக்கக்கூடாது. எனவே, நகையை கழற்றி என்னிடம் தாருங்கள்’ என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மூதாட்டியும், கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து நைசாக தப்பி விட்டார். இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கைது
தனிப்படை போலீசார் தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நகையை பறித்து சென்ற நபரின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர்கோணம் பகுதியை சேர்ந்த முரளி (59), என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மூதாட்டியின் தங்க சங்கிலிைய பறிமுதல் செய்தனர்.
இவர் மீது மார்த்தாண்டம், களியக்காவிளை உள்பட பல போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இவருக்கு தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருக்கிறா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---------