இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
முற்றுகை
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் களாம்பாக்கம் கிராமத்தில் காலம் காலமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி பலமுறை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், திருத்தணி ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம் மனு அளித்தோம். ஆனால், இதுநாள் வரையிலும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புகார் மனு
இதன் காரணமாக நாங்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். கடந்த 28-1-2022 அன்று நாங்கள் அனைவரும் நடைபயணமாக முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை நோக்கி் சென்றோம். ஆனால், போலீசார் அனுமதி மறுத்து எங்களை தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் விரைவில் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா தருவதாக தெரிவித்தனர். ஆனால், இதுநாள் வரையிலும் வழங்கப்படவில்லை. இவ்வாறாக நாங்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்காவிட்டால் சென்னை சென்று அங்கு எங்களது ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர். பின்னர், அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.