பரமத்திவேலூர் பகுதி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு

பரமத்திவேலூர் பகுதி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு

Update: 2022-04-07 14:03 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கலெக்டர் ஸ்ரயோ சிங் ஆய்வு நடத்தினார்.
வருகை பதிவேடு
பரமத்திவேலூர் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒழுகூர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின்போது மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு ஆகியவை குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள் குறித்தும், அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் வகுப்பு ஆசிரியர்கள் பேசினார்களா எனவும், பள்ளிக்கு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பின்னர் குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் கல்வித்தரத்தை பரிசோதித்தார். மாணவ, மாணவிகள் தங்களது முழு ஈடுபாட்டையும், உழைப்பையும் படிப்பில் செலுத்த வேண்டும் என்றும், அப்போது தான் இலக்கை அடைய இயலும் என்றும், கவனத்துடன் படித்து தங்களது இலக்கை அடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அடிப்படை வசதிகள்
அதனைத்தொடர்ந்து பள்ளிகளில் குடிநீர் வசதி, வகுப்பறை கட்டிடங்கள் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். குப்பிச்சிபாளையம் மற்றும் ஒழுகூர்பட்டி அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர்களிடம் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை, வயதிற்கேற்ற எடை மற்றும் உயரம் குறித்த விவரம், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகள் குறித்தும், அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றதா எனவும் கேட்டறிந்தார். 
மேலும் ஒழுகூர்பட்டி துணை சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகளையும், துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை, ஆண், பெண் குழந்தைகளின் பாலின விகிதம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின்போது பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்