பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த காஞ்சீபுர மாவட்ட கலெக்டர்
பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. இதனை முழுமையாக கண்காணிக்க மாவட்ட அளவிலான பணிக்குழு காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்து, மேலும் இதை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், வினியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்து, அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் பா.நாராயணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.