சங்கரநாராயண சுவாமி கோவில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் சித்திைர திருவிழாவையொட்டி சங்கரநாராயண சுவாமி கோவில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

Update: 2022-04-06 22:49 GMT
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.15 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் சங்கரலிங்க சாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் யானை “கோமதி" பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோமளாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி காலை 7.05 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு களப்பாகுளத்தில் உள்ள கல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி மதியம் 1.40 மணிக்கு நடந்தது. இதில் மண்டகப்படிதாரர்கள், சங்கரன்கோவில், களப்பாகுளம், பெருங்கோட்டூர் மற்றும் சுற்று பகுதி கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதில் சுவாமி-அம்பாள் 2 தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்