திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் நிபுணருடன் ஆலோசனை நடத்தியது.
விருதுநகர்,
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் நிபுணருடன் ஆலோசனை நடத்தியது.
ஆலோசனை
சென்னை பிரபல அணு விஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பா ஏற்கனவே திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தினை தயாரித்துக் கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி மற்றும் அலுவலர்களுடன் நகராட்சி பகுதியில் திடக்கழிவினை உரமாக மாற்றுவது குறித்தும் மின்சாரம் தயாரிப்பது குறித்தும், கழிவுநீரில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீராக மாற்றுவது குறித்தும் அணு விஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பா ஆலோசனை நடத்தினார்.
புதிய திட்டம்
இதுகுறித்து அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:- மும்பை பாபா அணு ஆராய்ச்சிக்கழகம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், அதன் மூலம் பல்வேறு வகைகளில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும், மக்களுக்கும் பயன் கிடைக்கும் வகையிலும் திட்டங்களை தயாரித்துள்ளது. அந்த வகையில் திடக்கழிவுகளிலிருந்து பசுமை உரம் தயாரிக்கவும் அதிலிருந்து எரிவாயு மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீரை நுண்ணுயிரை பயன்படுத்தி சுத்தப்படுத்தி அதனை விவசாயம், கட்டுமானப்பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பாபா அணு ஆராய்ச்சி கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, மதுரை அதற்கு அடுத்தப்படியாக விருதுநகர் பகுதியிலும் இத்திட்டங்கள் மூலம் நகரில் மாசுபடுவதை தடுக்கவும், அதன் மூலம் நகராட்சிக்கு வருமானம் கிடைக்கவும் திட்டங்களை செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினேன்.
மின்சாரம் தயாரிக்கலாம்
விருதுநகர் நகர் பகுதியில் தினசரி 6 முதல் 7 டன் திடக் கழிவு வருவதாக தெரிவித்தனர். 1 டன் திடக்கழிவில் இருந்து 100 கிலோ பசுமை உரம் தயாரிக்க முடியும். மேலும் 100 யூனிட் மின்சாரமும் தயாரிக்க முடியும். கழிவுநீர் கால்வாய்களில் ஓடும் கழிவுநீரில் இருந்து நுண்ணுயிரை பயன்படுத்தி தூய்மைப்படுத்தி அதனை விவசாயத்திற்கும், கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். நகராட்சிக்கு தேவைக்கு போக மீதத்தை அவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் முடியும். இதன் மூலம் நகராட்சிக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருதுநகர் மாவட்ட கலெக்டரும், இம்மாதிரியான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த இன்று (அதாவது நாளை) நேரம் ஒதுக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.