குமரியில் பூத்துக் குலுங்கும் கனிக்கொன்றை மலர்கள்

சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக குமரி மாவட்டத்தில் கனிக் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

Update: 2022-04-06 21:57 GMT
குலசேகரம்:
சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக குமரி மாவட்டத்தில் கனிக் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கொன்றை மரம்
கொன்றை மரங்களில் பல்வேறு வகைகள் உள்ள நிலையில், இவற்றில் கனிக்கொன்றை எனப்படும் சரக்கொன்றை மரங்கள் விசேஷமானவை. 'கேஷியா பிஷ்டுல்லா' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மரங்களில் தங்கமழை பொழிவது போன்று பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கும். இதனால் இம்மரப் பூக்களை 'கோல்டன் ஷவர்' என்றும் வர்ணிக்கப்படுவதுண்டு. இளவேனில் காலம் அல்லது வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் இம்மரங்கள் சித்திரை மாதப் பிறப்பை வரவேற்கும் வகையில் இருப்பது தனிச்சிறப்பாகும். இந்த மரங்கள் குமரி மாவட்டத்தில் வீடுகளின் முன்பும் கோவில்களிலும் அதிக அளவிலும் காணப்படுகின்றன.
விஷூ கனி காணல் 
கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சியில் கனிக்கொன்றை பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு தட்டுகளில் பல்வேறு வகையான கனிகளுடன், மஞ்சள் நிற கனிக்கொன்றை பூக்களையும் வைத்து பார்த்தால் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவில்களில் நடைபெறும் விஷூ கனி காணல் நிகழ்ச்சிகளிலும் கனிக்கொன்றைப் பூக்கள் வைக்கப்படுகின்றன. இற்காக பங்குனி கடைசி நாளில் மக்கள் இந்த மரங்களில் ஏறி பூக்களை பறித்துக் கொள்கின்றனர்.
மருத்துவ குணம்
இது குறித்து தோட்டக்கலை அலுவலர் ஒருவர் கூறுகையில், கேசியா பிஸ்டுல்லா என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்ட கனிக் கொன்றை மரங்களின் தாயகம் இந்தியாவாகும். குறிப்பாக தென்னிந்தியாவில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. கொன்றை மரங்கள் குறிப்பாக கனிக்கொன்றை அல்லது சரக்கொன்றை மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரங்களாகும். கனிக்கொன்றை மரங்களின் வேர் முதல் பூக்கள் வரை மருத்துவக் குணம் கொண்டவை. மேலும் காற்றிலுள்ள நச்சு வாயுகளை உள்வாங்கி சுற்றுச் சூழலையும் இம்மரங்கள் பாதுகாக்கின்றன. சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ் பக்தி இலக்கியங்களிலும் இப்பூக்கள் குறித்த பாடல்கள் உள்ளன. இப்பூக்கள் பெண்களின் நீண்ட கூந்தல் போன்றவை என வர்ணிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்