பந்தளராஜா அய்யப்ப கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அய்யப்ப கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-06 21:33 GMT
பெங்களூரு:

கும்பாபிஷேகம்

  பெங்களூரு ஸ்ரீராமபுரம் தயானந்தநகர் முதலாவது மெயின் ரோட்டில் பந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் சார்பில் புதிதாக அய்யப்ப கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் ஆலய பிரதிஷ்டா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 6-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

  முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி இருந்தது. இந்த நிலையில் நேற்று கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் விசேஷ சந்தி, நான்காம் காலயாகம், யாத்ரா ஹோமம், தசதானம் நடந்தது. காலை 9.05 மணியளவில் விமான கோபுர கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே சரணம் அய்யப்பா என கோஷம் எழுப்பினர். இந்த கோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.

ஹரிவராசனம்

  பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், ஸ்ரீதர்மசாஸ்தா மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதனை தொடர்ந்து தீபாராதனை, ஆசார்ய உற்சவம், யஜமான உற்சவமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலில் அருகே உள்ள மைதானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  இரவு 8.45 மணிக்கு மகா மங்களராத்தியும், இரவு 9 மணிக்கு ஹரிவராசனம், தாலாட்டு நடந்தது. இதிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  இந்த நிகழ்ச்சிகளில் கோவில் நிறுவனர் அய்யப்பதாசன் டி.பரமசிவம் குருசாமி, அவரது மனைவி நாகேஸ்வரி மற்றும் அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்