30 பவுன் நகை, ரூ.8 லட்சத்துடன் இளம்பெண் மாயம்
தென்தாமரைகுளம் அருகே 30 பவுன் நகை, ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் மகனுடன் இளம்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே 30 பவுன் நகை, ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் மகனுடன் இளம்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
இளம்பெண் மாயம்
தென்தாமரைகுளம் அருகில் உள்ள ஆண்டிவிளை வடக்குப் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 36). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி பாலசாந்தி (30). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2½ வயதில் ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜன் மீன் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது பாலசாந்தி மற்றும் மகனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
30 பவுன் நகை
பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் 30 பவுன் தங்க நகைகளையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி நாகராஜன் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பால சாந்தியையும், அவருடைய மகனையும் தேடி வருகிறார்கள். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் புதுக்கடை பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபிதாஸ் (36) கட்டிட தொழிலாளியான இவருடைய மனைவி பிரபா (23). சம்பவத்தன்று பிரபா தன்னுடைய 4 மாத குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.