பண மதிப்பிழப்பின் போது முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி தலைமை காசாளருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
பண மதிப்பிழப்பின் போது முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி தலைமை காசாளருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. அந்த வங்கியில் தலைமை காசாளராக பணியாற்றியவர் தினேஷ். நாட்டில் பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு இருந்த போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி, பல கோடி ரூபாய் முறைகேட்டில் தினேஷ் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி காசாளர் தினேஷ் மோசடியில் ஈடுபட்டு இருந்தார். இதுதொடர்பாக பெங்களூரு சி.பி.ஐ. அலுவலகத்தில் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தினேஷ் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது பண மதிப்பிழப்பின் போது பல கோடி ரூபாயை தினேஷ் மோசடி செய்திருப்பதாலும், அவர் மீதான குற்றம் நிரூபணமாகி இருப்பதாலும், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 கோடியே 19 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.