தொழில்அதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை, பணம் திருட்டு
தொழில் அதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை--பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உரமாவு பகுதியில் வசித்து வருபவர் நிர்மல் சர்மா. தொழில்அதிபரான இவர், பிதரஹல்லு பகுதியில் சொந்தமாக தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலையில் அவர் வழக்கம் போல தொழிற்சாலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். மதிய வேளையில் நிர்மல் சர்மாவின் குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே புறப்பட்டு சென்றிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நிர்மல் சர்மாவின் வீட்டுக்கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டார்கள்.
வெளியே சென்றிருந்த நிர்மல் சர்மாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பிய போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் மர்மநபர்களால் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நிர்மல் சர்மா கொடுத்த புகாரின் பேரில் ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.