சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
ஈரோடு பெரியண்ணன் வீதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் அதிக அளவில் புழுக்கள் காணப்படுவதோடு கொசுக்களும் உற்பத்தியாகி உள்ளன. இதனால் அந்த பகுதியில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பெரியண்ணன் வீதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ண தனிஷா, ஈரோடு.
பஸ் இயக்கப்படுமா?
கோபியில் இருந்து கலிங்கியம், செம்மாண்டம்பாளையம், மல்லிபாளையம், கோசனம் வழித்தடத்தில் நம்பியூருக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வழித்தடத்தில் ரோடு பராமரிப்பு பணி காரணமாக அந்த அரசு டவுன் பஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரோடு பராமரிப்பு பணி முடிந்தும், அரசு டவுன் பஸ்சானது மாற்றுப்பாதையில் தான் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மீண்டும் பஸ்சை முறையான வழித்தடத்தில் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நம்பியூர்.
மண் குவியல் அகற்றப்படுமா?
அந்தியூரை அடுத்த செல்லம்பாளையம் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்க கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. பின்னர் அதிலுள்ள மண், மாதிரி பள்ளி அருகில் பர்கூர் ரோட்டில் குவிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அவதிப்படுகிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அதிகாரிகள் மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், புதுப்பாளையம்
குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு மூலப்பட்டறை நால்ரோட்டில் இருந்து பவானி செல்லும் ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி அந்தப்பகுதியில் விபத்து ஏற்படுகின்றது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வெளியேறி வீணாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த குண்டும்-குழியுமான சாலையையும், உடைந்த குடிநீர் குழாயையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஸ்வரன், ஈரோடு.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரோட்டில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று அடிக்கும் போது குப்பை தூசு பறந்து வீட்டிற்குள் வந்து விடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமுவேல், ஈரோடு.
--------------