மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது

தஞ்சை மாவட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒரே நாளில் 18 வாகனங்கள் மீட்கப்பட்டன.

Update: 2022-04-06 20:59 GMT
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒரே நாளில் 18 வாகனங்கள் மீட்கப்பட்டன.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
தஞ்சைமாவட்டத்தில் பல இடங்களில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போய் வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு புகார் அதிகரித்து வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மோட்டார் சைக்கிள் திருடனை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். மேலும், பல இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு நபரின் உருவம் மட்டும் பதிவாகியிருந்தது.
ஒருவர் கைது
இதைத்தொடர்ந்து அந்த நபரை போலீசார் தேடி வந்தபோது நடுக்காவேரி போலீஸ நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய, திருவையாறு அருகே கருப்பூர் காலனி தெருவை சேர்ந்த கோபிநாத் (41) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நேற்று காலை பிடித்து விசாரித்த போது, அவர் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகனங்களை திருடி அதனை, மணல் திருட்டுக்காக குறைவான விலையில் திருவையாறு பகுதியில் விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.
18 வாகனங்கள் பறிமுதல்
இதையடுத்து போலீசார் நேற்று ஒரே நாளில் திருவையாறு, நடுக்காவேரி, கருப்பூர் ஆகிய இடங்களில் கோபிநாத் விற்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோபிநாத்தை கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்