நகைக்கடன் தள்ளுபடி பட்டியலை வெளியிட வேண்டும்

நகைக்கடன் தள்ளுபடி குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-04-06 20:52 GMT
தஞ்சாவூர்;
நகைக்கடன் தள்ளுபடி குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
நிர்வாகிகள் கூட்டம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் பழனியப்பன், துணைத்தலைவர் கிருஷ்ணமணி, மாவட்ட தலைவர்கள் செந்தில், சுப்பையன், ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது
உரம் விலை உயர்வை கைவிட வேண்டும்
மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை வேகமாக புகுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் உரங்களின் விலையை உயர்த்தி உள்ளது. குறிப்பாக காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட உரங்களின் விலையை உயர்த்தி உள்ளது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக விலையை உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக விலை உயர்வை கைவிட வேண்டும்.
நெல் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை
ஒரு புறம் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யாமல் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நெல் விவசாயிகளும் இந்த ஆண்டு பல்வேறு நடைமுறைக்கு சாத்தியமில்லாத குளறுபடிகளால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பேரிழப்பைச் சந்தித்தனர். எனவே நெல் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்று சாகுபடி என்பதை ஏற்க முடியாது.
இலங்கையில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.7,500 கோடி நிதியுதவி செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டில் உணவு தட்டுப்பாடுதான் ஏற்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்த வெங்காயம், தக்காளி, காய்கறிகள், நெல் தேங்கி அழிகிற நிலையில், இவற்றை மத்திய அரசு உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்து, இலங்கைக்கு ரூ.7,500 கோடி மதிப்புள்ள உணவுப்பொருட்களை அனுப்பி வைத்தால், தமிழக விவசாயிகளும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படுவர். இலங்கைக்கும் நாம் உணவு கொடுத்ததாக நம்பிக்கை ஏற்படும்.
பட்டியலை வெளியிட வேண்டும்
நகைக்கடன் தள்ளுபடி குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும். வேளாண் மற்றும் அது சார்ந்த திட்டங்களுக்கு மட்டும் விவசாய கடன் வழங்க வேண்டும். வருகிற ஜூன் மாதம் தஞ்சையில் மாநாடு மற்றும் வேளாண் எந்திர கண்காட்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்