மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 6,600 பேர் முன்பதிவு
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண டிக்கெட் முன்பதிவு இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை 6,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மதுரை,
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண டிக்கெட் முன்பதிவு இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை 6,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
திருக்கல்யாண டிக்கெட்
மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு ஆகும். இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதில் 500 ரூபாய் டிக்கெட்டில் 2,500 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 3,200 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
500 ரூபாய் பதிவில் 2 டிக்கெட்டுகளும், 200 ரூபாய் பதிவில் 3 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் 500, 200 ரூபாய் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாது.
இன்று கடைசி நாள்
இந்த டிக்கெட்டுகள் கோவில் இணையதளத்தில் (WWW.maduraimeenakshi.Org) கடந்த 4-ந் தேதி முதல் இன்று (7-ந் தேதி) வரை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வரவேற்பு அறையில் மேற்படி நாட்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
6,600 பேர் முன்பதிவு
அதன்படி நேற்று இரவு வரை 500 ரூபாய் டிக்கெட்டில் 4,100 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 2,500 பேர் என மொத்தம் 6,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் பக்தர்கள் வரிசையில் நின்று பதிவு செய்து வருகிறார்கள். முன்பதிவு செய்ய இன்று (7-ந் தேதி) கடைசி நாள் என்பதால் இன்னும் கூடுதலாக பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிவு செய்த விண்ணப்பங்களுக்கு 8-ந் தேதி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டணச்சீட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அவ்வாறு உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் ஆன்-லைன் மூலமாக வருகிற 9, 10-ந் தேதிகளில் அதற்கான தொகை செலுத்த வேண்டும். பின்னர் பணம் செலுத்தியமைக்கான ரசீது நகலினை 11-ந் தேதி காலை 10 மணி முதல் 12-ந் தேதி மாலை 5 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் கொடுத்து உரிய நுழைவுக் கட்டண டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் டிக்கெட் வாங்க வேண்டும்.
இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.