ஈரோட்டில் ஒரே மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு

ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்த போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.

Update: 2022-04-06 20:40 GMT
ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்த போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.
போக்குவரத்து விதிமீறல்
ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக சிக்னலை மதிக்காமல் விதிகளை மீறுபவர்களின் வாகன எண்களை குறிப்பிட்டு போக்குவரத்து போலீசார் உடனடியாக அபராதம் விதிக்கின்றனர். ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசாரும், வடக்கு போக்குவரத்து போலீசாரும் பல்வேறு முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இல்லாமலும், குடிபோதையிலும் வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் எடுத்த நடவடிக்கையில், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டியதாக 201 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியதாக 1,592 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றதாக 1,010 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டியதாக 149 வழக்குகளும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டியதாக 121 வழக்குகளும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து சென்றதாக 140 வழக்குகளும் உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 4 ஆயிரத்து 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ரூ.3 லட்சம் அபராதம்
இதேபோல் ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் எடுத்த நடவடிக்கையில், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டியதாக 94 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியதாக 2 ஆயிரத்து 762 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றதாக 2 ஆயிரத்து 424 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டியதாக 234 வழக்குகளும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து சென்றதாக 199 வழக்குகளும் உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 6 ஆயிரத்து 592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
எனவே ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஒரே மாதத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்