போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 2 பேருக்கு விதித்த தண்டனை உறுதி
போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 2 பேருக்கு விதித்த தண்டனை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றியவர் ஜெகதீஷ் துரை. கடந்த 2018-ல் நம்பியாறு பகுதியில் நடந்த மணல் கொள்ளையை தடுக்க சென்ற போது ஜெகதீஷ்துரை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன் (வயது 29), கிருஷ்ணன் (52), முருகபெருமாள் (22), மணிக்குமார் (28), ராஜாரவி (29), அமிதாப்பச்சன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு, கடந்த 2019-ல் முருகப்பெருமாளை விடுவித்தது. மற்ற 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 5 பேரும் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர்.முடிவில், முருகன், கிருஷ்ணன் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மற்ற 3 பேரையும் விடுவித்தனர்.