தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்

தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் குளிர்பான கடைகள் மற்றும் பழக்கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Update: 2022-04-06 20:37 GMT
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் குளிர்பான கடைகள் மற்றும் பழக்கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கோடை காலம்
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அடுத்த மாதம் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
எனவே அக்னி நட்சத்திர கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நேற்று வெயில் 100.4 டிகிரி கொளுத்தியது. இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
குடைகளுடன் மக்கள்
சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இவ்வாறு செல்பவர்களும் குடைகளை பிடித்துக்கொண்டும், முகத்தில் துணியை மூடிக்கொண்டும் சென்று வருகிறார்கள். பகல் நேரத்தில் தான் இவ்வாறு என்றால், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே உள்ளது. இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வரும் காற்று அனல்காற்றாகவே வருகிறது.
கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 107 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த வெப்பத்துக்கு மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன. ஆடு, மாடுகள் சாலையோரத்தில் உள்ள மரங்களின் நிழல் அல்லது பெரிய கட்டிடங்களின் நிழலில் தஞ்சம் அடைவதை காண முடிகின்றது.
குளிர்பானம்- பழக்கடைகள்
வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானங்களை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இதே போன்று பழக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பழங்களின் விலைகளும் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டாலும் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்வதற்காக பழங்களை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
இது தவிர சாலையோங்களில் பதநீர் கடைகள், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, கிர்ணி பழங்கள், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கரும்பு ஜூஸ் போன்ற கடைகளும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இதன் விற்பனையும் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் சாலையோரங்களில் தண்ணீர் பந்தலும் ஆங்காங்கே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் திற்க்கப்பட்டு உள்ளது.
இங்கு நீர்மோர், பானகரம், தர்ப்பூசணி போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

மேலும் செய்திகள்