அரியலூர் நகராட்சியில் தூய்மை-சுகாதார பணிகள்; நாளை தொடங்குகிறது
அரியலூர் நகராட்சியில் தூய்மை-சுகாதார பணிகள் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.
அரியலூர்:
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, மீண்டும் ஒட்டுமொத்த மஞ்சப்பை இயக்கத்தின் கீழ், அரியலூர் நகராட்சியில் தூய்மை பணி நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி 2 நாட்களில் அரியலூர் நகராட்சி பகுதி முழுவதும் தூய்மை பணி மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அரியலூர் நகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றுக்கு இந்த இயக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. மேலும் பிளாஸ்டிக் இல்லா அரியலூரை உருவாக்கும் முயற்சியாக நகராட்சியின் அனைத்து பகுதிளிலும் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதோடு, பொதுமக்களிடம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் குறித்தும், அவற்றுக்கு பதிலாக, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வியக்கத்தில் ஆர்வத்துடன் பங்கு கொள்ள இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் தூய்மையை மேம்படுத்தி தக்க வைத்து கொள்ளும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தூய்மை பாதுகாவலர் என்ற பட்டமும், சுழற்சி கேடயமும் வழங்கப்பட உள்ளது. எனவே மேற்படி தூய்மை பணி இயக்கத்தில் அனைவரும் பங்கு பெற்று தூய்மையான மற்றும் பிளாஸ்டிக் இல்லா அரியலூரை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று நகராட்சி சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.