அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-04-06 20:32 GMT
தா.பழூர்:
தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் நமது மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்கிற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் செயல்பாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்புகள் எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கி சிறந்த முறையில் பராமரிக்கப்படும் மருத்துவமனைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமது மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார். அப்போது வளாக பராமரிப்பு, ஆய்வகங்கள், மருந்து வழங்கும் இடங்கள், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சுகாதார அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்