ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்டோரால் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் மாயவேலு அறிவுறுத்தலின்பேரில் நேற்று முன்தினம் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கி தீவிரமாக நடந்தது. இதில் பெரம்பலூர் நான்கு ரோடு முதல் சங்குபேட்டை வரை நெடுஞ்சாலையில் செய்யப்பட்டிருந்த கடைகள் உள்ளிட்டவையின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
2-வது நாளாக நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதில் சங்குபேட்டை முதல் கடைவீதி வழியாக துறையூர் சாலை வரை நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. இதேபோல் பெரம்பலூர்-ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இன்று (வியாழக்கிழமை) பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் முதல் புதிய பஸ் நிலையம் வரை நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளது. பெரம்பலூரில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டரும், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரும் எச்சரித்துள்ளனர்.