ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்றதாக 121 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் கஞ்சா, புகையிலை பொருட்களை விற்றதாக 121 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-06 20:28 GMT
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் கஞ்சா, புகையிலை பொருட்களை விற்றதாக 121 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
தமிழகம் முழுவதும் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகில் கஞ்சா, புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார்.
அவருடைய உத்தரவின்பேரில் கடந்த 28-ந் தேதி முதல் போலீசார் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ரகசிய தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று போதை பொருட்களை பதுக்கி வைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் மோப்ப நாய் உதவியுடன் வாகனங்களில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று போலீசார் சோதனையிட்டனர்.
இருசக்கர வாகனங்கள்
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 28-ந் தேதி முதல் 5-ந் தேதி (நேற்று முன்தினம்) வரை 9 நாட்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 62 கஞ்சா வழக்குகளில் 76 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 25 கிலோ 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 40 புகையிலை வழக்குகளில் 45 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 135 கிலோ 275 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், மது விற்பனை செய்யப்பட்டதாக 102 வழக்குகள், லாட்டரி சீட்டு விற்றதாக 6 வழக்குகள், பணம் வைத்து சூதாடியதாக 3 வழக்குகள் என மொத்தம் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் மது விற்பனை செய்யப்பட்டதாக 102 பேரும், லாட்டரி சீட்டுகளை விற்றதாக 10 பேரும், சூதாட்டம் ஆடியதாக 13 பேரும் என மொத்தம் 125 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து 1,525 மது பாட்டில்கள், 32 லிட்டர் கள், 8 இருசக்கர வாகனங்கள், 46 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், ரூ.40 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டன.
கடும் நடவடிக்கை
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசுடமை ஆக்கப்பட உள்ளன. மது, லாட்டரி சீட்டுகள், புகையிலை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்தல், பணம் வைத்து சூதாட்டம் நடத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் குறித்த புகார்களை 96552 20100 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்