8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் போலீசில் சிக்கினார்
காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு 8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம்:-
காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு 8 ஆண்டுகளாக தேடப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தாளமுத்து நடராஜன் கொலை
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (வயது 54). சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று தாளமுத்து நடராஜனை கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த செயில்தர்சிங் (56) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும் கடந்த 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த செயில்தர் சிங் பின்னர் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகவில்லை.
8 ஆண்டுகளுக்கு பிறகு கைது
இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் செயில்தர் சிங்கை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் அசோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் செயில்தர் சிங்கை 8 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்படை போலீசார் கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.