காவடி பழனியாண்டவர் ஆசிரம கும்பாபிஷேகம்
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரம கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
சேலம்:-
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரம கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காவடி பழனியாண்டவர் ஆசிரமம்
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரம கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 3-ந்தேதி யாக சாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 4-ம் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில் 5-ம் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆசிரம வளாகத்தில் அமைக்கப்பட்ட 164 யாக சாலைகளில் 200 சிவாச்சாரியார்கள் மூலம் ஹோமங்கள் நடத்தப்பட்டன.
நேற்று அதிகாலை 3 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து ருத்ரம் திருமுறை பாராயணம் மற்றும் பூர்ணாஹூதியும் நடத்தப்பட்டன. பின்னர் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக தீர்த்தக்குடங்களில் புனித நீரை எடுத்து வந்தனர். தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷத்துடன் புனித நீர் கோபுர கலசத்தில் தெளிக்கப்பட்டு காவடி பழனியாண்டவர் ஆசிரம கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதிய சன்னதிகள்
மேலும் ஆசிரம வளாகத்தில் உள்ள புதிய சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 108 லட்சுமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முருகனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோவில் வளாகத்தை சுற்றி நின்று கொண்டிருந்த பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆசிரம கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே காவடி பழனியாண்டவர் ஆசிரமத்துக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் வந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் காலை 11 மணிக்கு வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீ காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தங்கரத ஊர்வலம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று (வியாழக்கிழமை) முதல் மண்டல பூஜை தொடங்கி, 18-ந்தேதி மண்டல பூஜை நிறைவடைகிறது.