அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை திருட்டு
திட்டக்குடி அருகே அடுத்தடுத்த 2 வீடுகளில் மர்ம நபர்கள் நகையை திருடி சென்றுவிட்டனர்.;
திட்டக்குடி,
திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 43). விவசாயி. இவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரியில் மனைவியுடன் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு ரவியின் தந்தை சிதம்பரம், வீட்டை பூட்டி விட்டு, முன்பகுதியில் உறங்கினார்.
இந்நிலையில், நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோ கதவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த செல்வராசு(42) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ஒரு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.