என்.எல்.சி.க்கு எதிராக தடையை மீறி போராட்டம்

நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடவந்த பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-06 19:13 GMT
நெய்வேலி, 

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வாரிசுகள், நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகள்,  ஐடிஐ பயிற்சி முடித்துவிட்டு என்.எல்.சி.யில் தொழில் பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்தனர்.

இவர்கள் இந்த பயிற்சியின் போது, என்.எல்.சி. நிர்வாகம் தன்னுடைய வேலைக்கு தேவைப்படும் விதமாக நாங்கள் பயிற்சி பெற்ற ஐ.டி.ஐ. பிரிவை மாற்றியும்,  பயிற்சி பெற வேண்டிய காலத்தை அதிகரித்தும் நிறுவனத்திற்கு தேவைப்படும் விதமாக மாற்றி அமைத்து உள்ளார்கள். இதனால் பிற பொதுத்துறை, தனியார் துறைகளில் எங்களால் வேலைக்கு சேர முடியவில்லை. எனவே என்.எல்.சி. தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். 

போராட்டத்துக்கு தடை

இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை நெய்வேலி மத்திய பஸ்நிலையம் எதிரே உள்ள பொதுக்கூட்ட திடலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதற்காக, பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். அப்போது, அங்கு வந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் தாசில்தார் சுரேஷ்குமார் ஆகியோர், என்.எல்.சி.க்கு எதிராக யாரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூடாது, இந்த பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் என்.எல்.சி. நிர்வாகம் ஏற்கனவே தடையாணை உத்தரவு பெற்றுள்ளது, எனவே இங்கு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆகையால் அனைவரும் கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் செல்லவில்லை. 

250 பேர் கைது

இந்த நிலையில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் குமரவேல், காளிதாஸ், சுரேஷ், சங்கர், சீனிவாசன், ராஜன், இம்மானுவேல் உள்ளிட்ட சுமார் 250 பேரை போலீசார் கைது செய்து நெய்வேலி 27-வது வட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒரு மருத்துவமனை கட்டிடம் மற்றும் 18-வது வட்டத்தில் உள்ள பயிற்சி வளாகத்திலும் தங்க வைத்தனர்.

தங்களை கைது செய்தாலும், போராட்டம் தொடரும் என்று கூறி அங்கு அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் குமார் அங்கு வந்து, 190 பேர் கடலூர் சிறையில் அடைக்கப்பட இருப்பதாக கூறி, அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தியது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே அங்கு வந்த கோட்டாட்சியர் அதியமான்கவியரசு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது என்.எல்.சி. நிர்வாகம் இந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். 
எனவே நீங்கள் நீதிமன்றத்தை அணுகி உங்களது பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொள்வதாக  தொழிலாளர்கள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்