மனைவியை கொடுமைப்படுத்திய டிராவல்ஸ் உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை
டிராவல்ஸ் உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டையைச் சேர்ந்தவர் பிரபா என்ற பிரபாவதி(வயது 50). இவருக்கும், கோயம்புத்தூர் கொளத்தூரைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் செல்வகுமாருக்கும்(55), கடந்த 13-12-2007 அன்று திருமணமானது. அப்போது செல்வகுமார் பிரபாவிடம் தனக்கு திருமணமாகி மனைவி இருப்பதை மறைத்து பிரபாவை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு வருடம் கடந்த நிலையில் முதல் மனைவி உயிரோடு இருப்பதை அறிந்த பிரபா அதுபற்றி தனது கணவர் செல்வகுமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் அவரை ஆபாசமாக திட்டி கொடுமைப்படுத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.
இதனால் அங்கிருந்து தனது தாய் வீட்டிற்கு வந்த பிரபா தன்னை ஏமற்றி திருமணம் செய்து கொண்ட தனது கணவர் செல்வகுமார் தொடர்ந்து தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு விருத்தாசலம் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் பிரபாவை ஏமாற்றி திருமணம் செய்த குற்றத்துக்காக செல்வகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அவரை கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு வெங்கடேஷ்குமார் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வக்கீல் அன்னலட்சுமி ஆஜரானார்.