அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு
கச்சிராயப்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் அதே பகுதியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகி்ன்றனர். இந்த விடுதியில் கலெக்டர் ஸ்ரீதர் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம், மாணவிகளுக்கு தரமான உணவு வழங்கவேண்டும். இதில் தவறு ஏதும் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவர்கள் விடுதி
இதேபோல் அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குள்ள அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியிலும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் உடன் இருந்தனர்.