மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மணல் எடுக்க அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், துணை தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஜனவரி மாதம் 5-ந் தேதி மணல் லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவையில் நீர்வளம் சம்பந்தமான மானிய கோரிக்கை நடைபெறும் நிலையில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இதற்காக மணல் எடுக்கும் 14 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.