நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு-420 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-04-06 18:32 GMT
நாமக்கல்:
20 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாயாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக உயர்ந்தது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-430, ஐதராபாத்-355, விஜயவாடா-368, மைசூரு-400, மும்பை-420, பெங்களூரு-400, கொல்கத்தா-423, டெல்லி-350.
உற்பத்தி சரிவு
முட்டை உயர்வு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பண்ணைகளில் முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைந்து உள்ளது. முட்டைக்கு போதிய விலை கிடைக்காததால், பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கோழிகளை அதிக அளவில் விற்பனை செய்து உள்ளனர். மேலும் பண்ணைகளில் குஞ்சு விடுவதையும் சரியாக பின்பற்றவில்லை.
இதனால் வரும் நாட்களில் முட்டை கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அதேபோல் முட்டை உற்பத்தியும் குறையும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கறிக்கோழி
இந்தநிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.116 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்