பரமத்திவேலூரில் மின் கம்பத்தில் மொபட் மோதி வியாபாரி பலி
பரமத்திவேலூரில் மின் கம்பத்தில் மொபட் மோதியதில் தலையணை வியாபாரி பலியானார்.;
பரமத்திவேலூர்:
தலையணை வியாபாரி
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 39). இவர் தலையணை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி சிவக்குமார் தலையணைகளை விற்பனை செய்ய கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு மொபட்டில் வந்தார். பின்னர் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
பரமத்திவேலூர் காவிரி புதிய பாலத்தில் சென்றபோது, மொபட் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்ததில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார்.
பலி
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சிவக்குமார் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மின்கம்பத்தில் மொபட் மோதிய விபத்தில் தலையணை வியாபாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.