பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கத்தாரி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கத்தாரி ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கத்தாரி ஊராட்சியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா கடந்த மார்ச் மாதம் 23-ந்் தேதி நேரில் சென்று ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கத்தாரி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி அம்சாவுக்கு ஏற்கனவே சொந்த வீடு இருக்கும் நிலையில் கடந்த 2021-2022-ம் ஆண்டு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஏற்கனவே ஆனந்தன் மனைவி அம்சாவுக்கு வீடு உள்ள தகவலை மறைத்து தகுதியற்ற பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்த தொகையை விடுவிக்க காரணமான கத்தாரி ஊராட்சி செயலாளர் சலபதியை பணியிடை பணிநீக்கம் செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.