வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா காட்டாம்பூண்டி கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காட்டாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் இஸ்லாமியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான மயானத்திற்காக கூடுதல் இடங்களை வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லா ஏழை, எளியவர்கள் காட்டாம்பூண்டி அரசு புறம்போக்கு நிலத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வசித்து வரும் 18 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வசித்து வரும் 15 பேருக்கு அதே இடத்தில் பட்டா வழங்குவது குறித்து நில நிர்வாக ஆணையாளரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான மேற்பார்வையாளர் காளிமுத்து, தாசில்தார் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.