விவசாயி வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை-பணம் கொள்ளை

மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-06 18:03 GMT
மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கன்னி கூட்டு ரோட்டை சேர்ந்தவர் தேவசகாயம் மகன் ஜோஸ்ஸ்டாலின் (வயது 33) விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் இளையாங்கன்னியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 
இதைபார்த்த அப்பகுதி மக்கள் செல்போன் மூலம் ஜோஸ்ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3¼ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை காணவில்லை.  அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்