மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும்
மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற்று சாதிக்க முடியும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்
சிவகங்கை,
மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற்று சாதிக்க முடியும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் உத்தரவின் பேரில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் திட்ட விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் படிக்கும் போது அடுத்தடுத்து என்ன வாய்ப்புகள் உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
தன்னம்பிக்கை
தற்போது சிவகங்கை அருகே உள்ள 24 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சி சிவகங்கையில் நடக்கிறது. தொடர்ந்து காரைக்குடியில் இதுபோல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு மூன்று கட்டங்களில் அதாவது 10-வது படிக்கும்போது, பிளஸ்-2 படிக்கும்போது, மற்றும் கல்லூரி படிக்கும் போது அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படும். அதற்கு வழிகாட்ட தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
எனவே, மாணவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்றவாறு அடுத்து என்ன செய்வது என்று தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் பிளஸ்-2 படித்து முடித்தவுடன் படிப்பை நிறுத்திவிடாமல் உயர்கல்வி படிக்க வேண்டும். இளநிலை டிகிரி முடித்த பின்பு வேலைக்கு செல்வதா, அல்லது மேற்படிப்பு படிப்பதா என்பதை திட்டமிட்டு படிக்க வேண்டும். மேலும் படிப்பதுடன் கூடுதல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது கணினி பயன்பாடு அதிகரித்து உள்ளதால் அது தொடர்பான பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக மேல்படிப்பு படித்த பின்னர் அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பது கிடையாது. எனவே விடாமுயற்சியுடன் தீவிரமாக படித்தால் மட்டும் தான் இலக்கை அடைய முடியும். தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.