வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பினர்.

Update: 2022-04-06 17:54 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் உள்ளன. இவர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு பூ வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு சிறு குறு தொழில்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைதுறை சார்பில் அங்கு சாலை விரிவுபடுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுக்க வேண்டும் என்று கிராம மக்களிடம் கூறி 15 அடி இடத்தில் இருந்த கட்டிடங்களை அகற்றினர். 

அதன் பின்னர் மேலும் 6 மீட்டர் இடம் வேண்டும் என்று கிராம மக்களிடம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதன் பேரில் அக்கிராம மக்கள் 6 அடி தூரம் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து கிராம மக்களே அகற்றி கொடுத்துள்ளனர்.

அதன்பின்னரும் 3-வது முறையாக நேற்று வந்த நெடுஞ்சாலை துறையினர் மேலும் சாலை அமைக்க இடம் வேண்டும் என்று பொக்லைன் எந்திரங்களுடன் கட்டிடங்களை அகற்ற வந்துள்ளனர்.
ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து இனி கட்டிடங்கள் இடித்தால் வீடு இன்றி நடு ரோட்டில் தான் நிற்க வேண்டும். மேலும் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு விடும் என்று கூறி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கிறோம், அதுவரை ஆக்கிரமிப்பு அகற்ற கூடாது என்று கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் செய்திகள்