பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பண்ருட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
பண்ருட்டி,
பண்ருட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உன்னத நோக்கத்தோடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையர் மகேஸ்வரி, துணை தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்டவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர். நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி காந்தி ரோடு, நான்கு முனை சந்திப்பு, லிங்க் ரோடு வழியாக கும்பகோணம் சாலையில் முடிவடைந்தது. இதில் என்ஜினீயர் சிவசங்கர், மேலாளர் ரவி, துப்புரவு அலுவலர் முருகேசன், கவுன்சிலர்கள் ஆனந்தி, ராமலிங்கம், கதிர்காமன், அருள், பழனி மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பரங்கிப்பேட்டை வயலாமூர், ஆதிவராகநல்லூர், சின்னகுமட்டி, பிச்சாவரம் ஆகிய ஊராட்சிகளிலும் பேரணி நடைபெற்றது.