இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை
இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம்,
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச மின்சாரம்
தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் நிலங்களில் விவசாயம் செய்து வாழ்வாதாரம் பெறுவதற்காக அரசால் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நிலங்களில் மின்மோட்டார்களை வைத்து நீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கோரி காத்திருப்பவர்கள் அதிகரித்துள்ள நிலையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டத்தினை அரசு செயல்படுத்தி வழங்கி வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த இலவச மின்சாரத்தை பலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக புகார் வருகிறது. இலவச மின்சார திட்டத்தில் மின் இணைப்பை பெற்று அதனை வீடுகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்த பின்னரும் அந்த மின் இணைப்பை திரும்ப ஒப்படைக்காமல் வீடுகளுக்கும் விவசாய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டுகளில் உள்ள அறைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் நகரை சுற்றியுள்ள விவசாய கிராம பகுதிகளிலும், காஞ்சிரங்குடி, பக்கீரப்பா பள்ளி, செங்கல்நீரோடை, லட்சுமிபுரம், அளவாய்கரைவாடி, திருப்புல்லாணி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
கோரிக்கை
இலவச மின்சார இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி வருவதை மின்வாரியம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும்,. அரசுக்கு வருவாய் ஏற்படுத்தி தர வேண்டிய அதிகாரிகள் இழப்பை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் கூறினர்.
எனவே, மாவட்டம் முழுவதும் இதற்கென உள்ள தனிப்படையினர் அல்லது மின்வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இலவச மின்சாரத்தினை முறைகேடாக பயன்படுத்துபவர்களை கண்டறிந்து இணைப்பை துண்டிப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.