ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.71 ஆயிரம் வந்ததால் மெக்கானிக் அதிர்ச்சி
திண்டிவனத்தில் பணம் செலுத்த முயன்றபோது ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.71 ஆயிரம் வந்ததால் மெக்கானிக் அதிர்ச்சியடைந்தார்.;
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவா் சிவராஜ்(வயது 28). இவர் டி.வி. மெக்கானிக் கடையில் பணிபுரிந்து வருகிறார். சிவராஜ், நேற்று முன்தினம் இரவு தனது கடையின் உரிமையாளர் ரவி கொடுத்த ரூ.13 ஆயிரத்தை டெபாசிட் செய்வதற்காக திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
பின்னர் டெபாசிட் செய்வதற்கு ‘எண்டர் பட்டனை’ அழுத்தியதும், பணம் செலுத்தும் சிறிய அறையில் பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தபோது அதில் ரூ.71 ஆயிரத்து 800 இருந்தது. இதையடுத்து நேற்று காலையில் சிவராஜ், தனது கடை உரிமையாளர் ரவி, அ.தி.மு.க. பிரமுகர் மலர்சேகர் ஆகியோருடன் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று, உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் 71 ஆயிரத்து 800 ரூபாயை ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து சிவராஜின் மனிதநேயத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் குற்றப்பிரிவு போலீசார் பாராட்டினர்.