வேலூர் அருகே மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை

அரியூர் அருகே மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-04-06 17:37 GMT
வேலூர்

அரியூர் அருகே மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிணமாக கிடந்தார்

வேலூரை அடுத்த அரியூர் அருகே உள்ள ஆவாரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 49), விவசாயி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கிருபாகரன் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றார். இந்த நிலையில் இரவில் ஆவாரம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மாந்தோப்பை ஒட்டியுள்ள காலியிடத்தில் கிருபாகரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக்கொலை

இதுகுறித்து பிரபாகரனின் மனைவி கவிதா அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்ததும், கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை நண்பர்களே அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (44), குமாரமங்கலம் (51), கிருஷ்ணமூர்த்தி (37), சர்தார் (41), சந்தோஷ் (28) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தாக்கியதில் கிருபாகரன் உயிரிழந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

செல்போன் திருட்டு

இறந்த கிருபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் அடிக்கடி சேர்ந்து மதுகுடிப்பது வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு குமாரமங்கலத்தின் செல்போன் திருட்டுபோனது. அதை கிருபாகரன் எடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த செல்போனும் அவரிடம் இருந்து மாயமாகிவிட்டது. இதை கிருபாகரன் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தபோது செல்போன் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் குமாரமங்கலம், ராஜேஷ் ஆகியோர் சேர்ந்து கிருபாகரனை தாக்கினர். இதற்கு சர்தார் உள்ளிட்ட 3 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். அனைவரும் தாக்கியதில் அவர் இறந்துவிட்டார். இறந்தது தெரியாமல் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்