லாரி மீது பஸ் மோதல்; டிரைவர் பலி

விழுப்புரத்தில் லாரி மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-04-06 17:32 GMT
விழுப்புரம், 

சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த குணசேகர் (வயது 30) என்பவர் ஓட்டிச்சென்றார். விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிரே திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற அரசு விரைவு பஸ் திடீரென அங்குள்ள சாலையை கடக்க முயன்றது. அப்போது நிலைதடுமாறி அந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இந்த விபத்தில் லாரியில் இருந்து கீழே விழுந்த டிரைவர் குணசேகர் மீது லாரியில் இருந்த இரும்புக்கம்பிகள் விழுந்தன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

5 பேர் காயம்

மேலும் அரசு விரைவு பஸ்சில் பயணம் செய்த பயணிகளான திருவண்ணாமலையை சேர்ந்த வேணு (46), பண்ருட்டி காடாம்புலியூரை சேர்ந்த ரமேஷ் (40), சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஷ் (38), நசிலன் (21), புவனேஸ்வரி (21) ஆகியோர் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்