சவப்பாடையில் சிலிண்டருடன் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

விலை உயர்வை கண்டித்து சவப்பாடையில் சிலிண்டருடன் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-06 17:20 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டியில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி கடலூர் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் இருந்து நகர செயலாளர் உத்திராபதி தலைமையில் கட்சியினர் சமையல் கியாஸ் சிலிண்டரை பாடையில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் அருகில் உள்ள இந்திராகாந்தி சாலைக்கு வந்தனர். பின்னர் அங்கு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இதில் சில பெண்கள் பாடையில் வைக்கப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டருக்கு அருகில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது போராட்டம் செய்தனர். இதற்கு வட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் நகர குழு உறுப்பினர்கள் தினேஷ் சங்கர், ராஜேந்திரன், பாண்டுரங்கன், வட்டக்குழு உறுப்பினர்கள் லோகநாதன் சங்கர், முருகன், மகாலட்சுமி, வசந்தா, தேவநாதன், குமரகுருபரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்